புதன், 16 ஜூலை, 2014

"ஸ்ரீ குமரகோட்ட ஆலய வருடாந்த மகோற்சவம்" 2014 




மேற்படி ஆலய 
வருடாந்த மகோற்சவமானது எதிர்வரும் ஆடித்திங்கள் 10ம் நாள் (26-07-2014) சனிக்கிழமை பிரதமைதிதியும், பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் ஆடித்திங்கள் 25ம் நாள் (10-08-2014) ஞாயிற்றுக்கிழமை காலை பூரணை திதியும், திருவோணநட்சத்திரமும், அம்ர்தசித்தயோகமும் கூடிய சுபவேளையில் தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவுபெற உள்ளது.

இவ்வண்ணம்
ஆலய பரிபாலனசபையினர்
ஸ்ரீ குமரகோட்டம்
முதலைக்குடா





















முருகன்படங்கள்







ஸ்ரீ குமரகோட்ட ஆலய பரிபாலனசபையினர் (புதிய உறுப்பினர்கள் தெரிவு 18-07-2014)

வெள்ளி, 4 ஜூலை, 2014

ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள்
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள்
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள்
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள் (உள்தோற்றம்)
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள்
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள் (உள்தோற்றம்)

சிந்தனைகள்



வியாழன், 3 ஜூலை, 2014

பெருமானே உடலைத் தருகின்றான்

74.
ஒரு மூச்சு என்று செறிவு நெறியில் குறிக்கப்படுகின்ற, இயல்பாய் மூச்சு வாங்கி விடுகின்ற அளவிலே, தந்தையின் மூச்சில், சற்று குறைவு ஏற்படுமாயின் குழவி குறளாய் அல்லது வளராது குட்டையாய்ப் பிறக்கும் என்கின்றார் திருமூலர். தந்தையின் மூச்சுக் காற்று பெரிதும் குறையுமாயின் குழவியின் கை கால்கள் முடமாகப் பிறக்கும் என்றும் குறிப்பிடுகின்றார். இதில் ஆணின் மூச்சே அன்றி பெண்ணின் மூச்சு அளவு குழவியின் உடலைத் தாக்குதல் இல்லை என்பதுவும் தெளிவு. இதனைப், “பாய்கின்ற வாயுக் குறையில் குறளாகும், பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும், பாய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும், பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லைப் பார்க்கிலே” என்கின்றார் திருமூலர்.
துணையர் கலவிக் காலத்தில் தாயின் வயிற்றில் நீங்க வேண்டிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த அறிவு உடையதாய் இருக்கும் என்கின்றார். தாயின் வயிற்றில் நீங்க வேண்டிய சிறுநீர் நீங்காது தங்கியிருக்குமாயின் குழவி ஊமையாகும் என்கின்றார். நீங்க வேண்டிய மலமும் சிறுநீரும் இரண்டுமே நீங்காமல் வயிற்றில் தங்கியிருக்குமாயின் குழவி குருடாகப் பிறக்கும் என்பதனை, “மாதா உதரம் மலம்மிகில் மந்தனாம், மாதா உதரம் சலம்மிகில் மூங்கையாம், மாத உதரம் இரண்டுஒக்கில் கண்ணில்லை, மாத உதரத்தில் வந்த குழவிக்கே” என்று குறிப்பிடுகின்றார். குழந்தையின் வினைக்கீடாகப் பெருமான் தாயின் வயிற்றிலும் தந்தையின் மூச்சிலும் பல்வேறு நிலைகளை ஏற்படுத்திக் குழவியின் அகப்புற உறுப்புக்களின் நலனை அமைக்கின்றான் என்பதனையும் திருமூலர் தெளிவிக்கின்றார்.
கலவியில் கூடும் கணவனின் மூச்சுக் காற்றின் இயல்போடு கணவனுக்கு மூச்சுக் காற்று வல மூக்கின் வழி இயங்கிக் கொண்டிருக்குமாயின், குழவி ஆணாய் அமைவதற்குப் பெருந்துணையாய் அமையும் என்றும் இடது மூக்கின் வழியாய் இயங்கிக் கொண்டிருப்பின் குழவி பெண்ணாய் அமையும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். மூச்சு இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்குமாயின் குழவி அலியாய் அமைவதற்குப் பெருந்துணையாய் முடியும் என்கின்றார். கருத்தங்கும் காலத்தில் தாயின் வயிற்றில் வெளியாக வேண்டிய மலக் காற்று போக்கப் படாமல் தடுக்கப் பட்டு மேல் எழுந்து பாயுமாயின் இரண்டு கரு தங்கும் என்பதனைக், “குழவியும் ஆணாம் வலத்து அதுவாகில், குழவியும் பெண்ணாம் இடத்து அதுவாகில், குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில், குழவி அலியாகும் கொண்டக் கால் ஒக்கிலே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். எது எப்படி இருப்பினும் இவை தந்தை, தாய், குழவி ஆகியோரின் வினைக்கு ஈடாகவே பெருமானால் அமைக்கப் பெறுகின்றன என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தாய் தந்தையரின் கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று வலம், இடம் என்னும்  வாங்கி விடும் வகையில் இருவருக்கும் வலமாகவோ அல்லது இடமாகவோ ஒரே அளவையுடன் இருக்குமானால் தங்கிய கருச் சிதைவு உறாது முன்பு குறிப்பிட்டது போல் குழவி ஆணும் பெண்ணுமாய் நிலை பெறுதலோடு அல்லாமல் அழகாயும் இருக்கும் என்கின்றார் திருமூலர். குழவி ஆண் பெண் ஆவதற்குத் தந்தையின் மூச்சுக் காற்று துணை நிற்கின்றது என்றாலும் தாயின் முச்சுக் காற்று தந்தையின் மூச்சுக் காற்றை ஒற்றிருத்தல் குழவியின் அழகிற்குக் காரணமாக அமையும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இன்றி தாய் தந்தையருக்கு மூச்சு மாறி மாறி இயங்குமானால் தயின் வயிற்றில் தங்கிய கரு பின் நிலை பெறாமல் அழிந்துப் போகும் என்கின்றார். இதனைக், “கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில், கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும், கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே” என்று குறிப்பிடுகின்றார்.
 தாய் தனது கருப்பையில் குழவியினை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தந்தையின் நடு நாடியில் தீயின் கூறாக விளங்கிப் பின் முதிர்ந்து தாயின் கருப்பையில் வந்து வெண் துளியாய் விழுகின்றது. எனவே குழவியை முதலில் கருக்கொள்வது தந்தையே என்று தெளிவாகின்றது. இது பற்றியே குழவிகளின் பிறப்புப் பத்திரங்களில் குழந்தையின் பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயரைக் குறிப்பிடுகின்றார்கள் போலும். தந்தையின் நடு நாடியில் தீயின் கூறாக விளங்கி முதிர்ந்து தாயின் கருப்பையின் உள்ளே வந்து விழுந்த குழவி, ஞாயிற்றின் நிறம் போல செந்நிறத்தை உடையதாய் முற்றி, அதன் பின்னர் ஆண், பெண், அலி எனும் வகைபடத் தோன்றுகின்ற உருப்புக்களை உடையது ஆகும் என்கின்றார். இதனைக், “கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும், தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம், பால் வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப், போல் வளர்ந்துள்ளே பொருந்து உருவாமே” என்று குறிப்பிடுகின்றார்.
தந்தையின் உடற்கூற்றில் வளரும் உயிர் ஆற்றல், தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளினுள் புகுந்து கெடாது நிற்றலே கருத் தங்குதல் ஆகும் எனப்படுகின்றது. குழவி ஒன்றாதலும் பலவாதலும் தந்தையின் உயிராற்றல் புகப் பெறும் பூப்புப் பொருள்களின் எண்ணிக்கையே காரணம் என்பர். தங்கிய கருவின் உருவம் பத்துத் திங்கள் கால அளவையின் போது வளரும். பத்தாவது திங்களே குழவி பிறக்கும் பருவமாகத் தாயின் வயிற்றிலிருந்து வெளி உலகிற்கு வரும். வெளி உலகிற்கு வந்த குழவி தாய் தந்தையரின் அரவணைப்பில் வளரும். அவ்வளர்ச்சி ஒவ்வொரு கணமும் நிகழும் என்றாலும் அதனை ஒருவரும் துள்ளியமாகக் காண வல்லவர் அல்லர். குழவியின் வளர்ச்சியினைக் கண்டு வியப்பு அடைவது மட்டுமே இயலும். மாறாகக் குழவியின் வளர்ச்சி நம் கண்களுக்குப் புலனாகாது தொடர்ந்து நடைபெறும் என்கின்றார் திருமூலர். குழந்தை கருவாதலும் கருப்பையினுள் வளர்ந்து குழவியாகிப் பிறக்குமாறும் பிறந்து வளருதலும் பெருமானின் அருட் துணையால் மாயையின் துணைக் கொண்டு நடைபெறுகின்றது என்கின்றார் திருமூலர்.
தாயின் வயிற்றில் கருவை இட்டவனாகிய தந்தையும் அக்கரு தங்குதலையும் தங்காது அழிவதனையும் அறியமாட்டான். தந்தை இட்டக் கருவினை ஏற்றத் தாயும் ஏற்றக் கரு தங்கியதா அல்லது அழிந்து பட்டதா என்று அறிய மாட்டாள். தந்தையிடம் இருந்து வந்த கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணிகலன் ஆக்குகின்ற பொற்கொல்லன் ஆகிய இறைவன் இதனை அறிவானே ஆயினும் அவனும் தாய் தந்தையருக்குக் கரு தங்கியதைச் சொல்லான். இறைவன் தாய் தந்தையரின் உயிரில் கலந்து இருப்பினும் அவன் செய்கின்ற இவ்வருட்செயல்களை உயிர்கள் அறியாமல் வாழ்கின்றன. தவிர மாயையின் வஞ்சனையை உயிர்கள் அறியாதனவாக உள்ளன என்பதனை, “இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள், தட்டான் அறிந்தும் ஒருவருக்கு உரைத்திலன், பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன், கெட்டேன் இம்மாயையின் கீழ்மை எவ்வாறே!” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆண் பெண் ஆகிய இருவரும் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப்பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின் தாய் தந்தையர் மட்டுமல்லாது குழந்தையும் தனது பிறப்பின் நோக்கத்தை அறியாமல் நிற்கின்றது என்பதனை, “இன்புற நாடி இருவரும் சந்தித்துத் துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின், முன்புற நாடி நிலத்தின் முந்தோன்றிய, தொண்புற நாடி நின்று ஓதலுமாமே” என்கின்றார் திருமூலர்.
குயில் தன் முட்டையைக் காக்கையினது கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டை என்றே அதனைக் கருதி அடை காத்தல் போல, இறைவன் தனது குழந்தைகளான உயிர்களை உடல் பெற்றுச் செயல்படுதல் பொருட்டுத் தாயின் கருவிலே இட தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாது உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அக்கருவினை அழித்து விட நினையாமலும், “ஏன் வந்தது” என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் மயக்கத்தினாலேயாம் என்கின்றார் திருமூலர். இதனால் கருவாய்த் தோன்றும் குழவி பெருமானின் மகவு என்பதும் அம்மகவினைப் பெருமான் தந்தை தாயர் வழி வைத்து வளர்த்து எடுக்கின்றான் என்பதுவும் தெளிவாகின்றது. இதனையே, “பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய் வளை” என்று பெருமானை மணிவாசகர் குறிப்பிடுவார். உலகம் ஒடுங்கும் காலத்து உடம்பும் பல நிலைகளில் ஒடுங்கி, முடிவில் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடலை மீளவும் முன்பு போலத் தோற்றுதல் வேண்டும் எனச் சிவ பெருமான் திருவுளம் கொள்ளின், அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்பு போலத் தோன்றும் என்கின்றார் திருமூலர். இதனால் உயிர்களுக்கு உடம்பு இறைவனாலேயே தோற்றுவிக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதுவும் ஆகின்றது என்று தெளிவுறுத்துகின்றார். பெருமான் செய்யும் பேர் உதவியினையும் அதற்குத் துணையாய் உள்ள பெற்றோரையும் போற்றி வாழ்வாங்கு வாழ்வோமாக!.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

. சைவத்தில் கடவுள் பலவா?
அன்னைத் தமிழில் அரிய மூவாயிரம் மந்திரங்களைத் தன்னகத்தே கொண்டுத் திருமந்திரம் என மிளிர்கின்ற திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். மிகச்சிறந்த சிவயோகியாகவும் சிவ ஆகம ஆசானாகவும் விளங்கும்  திருமூலர் அருளிய திருமந்திரம் பன்னிரு திருமுறை வரிசையில் பத்தாம் திருமுறையாக இடம் பெற்றுள்ளது. திருமந்திரத்தின் முதல் செய்தியாகக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சென்ற கட்டுரையில் கண்டோம். அப்படியாயின் சைவத்தில் ஏன் பல கடவுளர் எனும் கேள்வியினுக்குத் திருமூலர் கூறும் பதிலினை இனி காண்போம்.
பொது நிலைக்கு வராத தனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான். இந்நிலையில் அவனைச் சிவம் என்று குறிப்பிடுவோம். பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பவன் தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதுபோதுதான் “சிவமாக” இருந்த கடவுள், “சிவன்” ஆகின்றான் என்கின்றார். திருமந்திரத்தின் முதல் பாடலான, “ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்……”, எனும் பாடலிலேயே இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில் தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் “சிவை” என்கிறது.
பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும் பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம் முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், “எத்திறம் நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்” என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின் திருவருள் தாய்மை இயல்பும் இறைவனை விட்டு  வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப் பிரியாத இயல்பும் உடையது என்று உணர்த்தச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய் வைத்து வழிபட்டு மகிழ்ந்தனர்.
இக்காரணம் பற்றியே இறைவன் ஆண் ஒரு பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான். இதனையே, ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்” என்று தமிழ்ஞானசம்பந்தர் அருளினார். இதனால் இறைவனின் இடப்பக்கம் உள்ள பெண் வடிவம் நான் காணுகின்ற சாதாரணப் பெண்ணின் வடிவம் அல்ல! உமை அம்மையை இறைவனின் மனைவியைப்   போன்று உருவகப்படுத்தியே சொல்கின்றனர். இறைவனின் திருவருள் இறைவனுக்கு எல்லாமாக இருக்கின்றது  என்பதனைத்தான் திருமூலர், “அரனுக்கு மனோன்மணி தாயும், அரனுக்கு மனோன்மணி மகளும், அரனுக்கு மனோன்மணி     நல்தாரமுமாமே” என்று குறிப்பிடுவார். இறைவி இறைவனுக்குத் தாயாகவும் மகளாகவும் மனைவியாகவும் குறிக்கப்படுவது அவன் திருவருள் இயல்பினை உருவகமாகக் குறிப்பது பற்றியே அன்றி, அது அதுவாக அல்ல என்கிறார்.
எனவே சைவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சிவஆகமங்களிலே சொல்லப்பட்டுள்ள, திருமுறைகளிலே இயம்பப்பட்டுள்ள, பல்வேறு பெண் கடவுளர் வடிவங்கள் அனைத்தும் ஒன்றாய் இருக்கின்ற பரம்பொருளின் திருவருளையே குறிக்கும். அது இறைவனைத் தவிர வேறு அல்ல! தெளிவின்மையின் காரணமாகவே நம் கடவுள் இல்லறம் நடத்துதல்  போன்ற ஒரு மயக்க சிந்தனையில் உழல்கின்றோம். இறைவனின் அருள் இயல்பினையொட்டியே இறைவன் ஆற்றுகின்ற தொழில்களுக்கேற்ப இறைவனின் சத்திகளுக்கும் இறைவனுக்கும் பல்வேறு பெயர்களையும் வடிவங்களையும் வழங்கியுள்ளனர் நம் முன்னோர். வீர இயல்பினை மலைமகள் என்றும் செல்வம் நல்கும் இயல்பினை அலைமகள் என்றும் கல்வி நல்கும் இயல்பினைக் கலைமகள் என்றும் குறிப்பிட்டனர்.

அதற்கேற்பப் பெருமானின் பெயரையும் முறையே துடைப்போன், காப்போன், படைப்போன் என்றும் அமைத்தனர் (உருத்திரன், திருமால், பிரமன்). இவ்வடிவங்கள் இறைவனின் திருவருள் இயல்பு பற்றி அமைந்தவையே அன்றி கணவன் மனைவியர் என்று பொருள்படாது.
இவ்வடிப்படையிலேதான் பிற வடிவங்களும் வருகின்றன. முருகன், பிள்ளையார் போன்ற திருவடிவங்கள் வேறு கடவுளர் அல்ல! அல்லது இறைவனின் பிள்ளைகளும் அல்ல! இறைவன், இறைவி, முருகன், பிள்ளையார் போன்றோர் ஒரு குடும்பத்தினர் அல்லர்! ஒன்றாய் இருந்த பெருமானின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து அறிவு வடிவாய்த் தோன்றியதே அறிவு வடிவாகிய முருகன் வடிவம். ஒன்றாய் இருந்த இறைவரின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து ஓசை வடிவாக வெளிப்பட்டதே ஓம்கார வடிவாகிய பிள்ளையார். இவ்விரு வடிவங்களின் இயல்பு பற்றித் தோன்றிய பல்வேறு வடிவங்களும் பரம்பொருளான அந்த ஒரு இறைவனின் வேறு வடிவங்களே! எனவேதான், “எத்தெய்வம் கண்டீர் ஆங்கு அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவர்” என்று மெய்கண்ட நூல்கள் புகல்கின்றன.
எனவே, சீர்மிகு செந்தமிழர் இறைநெறியாகிய திருமந்திரத் திருநெறி சைவத்தில் கடவுள் ஒருவரே! பல்வேறாகத் தோன்றுவது அவ்வொறு பரம்பொருளின் அருள் வடிவங்களே என்று பறைசாற்றுகின்றது.
Print Friendly
Share !