புதன், 16 ஜூலை, 2014

"ஸ்ரீ குமரகோட்ட ஆலய வருடாந்த மகோற்சவம்" 2014 




மேற்படி ஆலய 
வருடாந்த மகோற்சவமானது எதிர்வரும் ஆடித்திங்கள் 10ம் நாள் (26-07-2014) சனிக்கிழமை பிரதமைதிதியும், பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் ஆடித்திங்கள் 25ம் நாள் (10-08-2014) ஞாயிற்றுக்கிழமை காலை பூரணை திதியும், திருவோணநட்சத்திரமும், அம்ர்தசித்தயோகமும் கூடிய சுபவேளையில் தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவுபெற உள்ளது.

இவ்வண்ணம்
ஆலய பரிபாலனசபையினர்
ஸ்ரீ குமரகோட்டம்
முதலைக்குடா





















முருகன்படங்கள்







ஸ்ரீ குமரகோட்ட ஆலய பரிபாலனசபையினர் (புதிய உறுப்பினர்கள் தெரிவு 18-07-2014)

வெள்ளி, 4 ஜூலை, 2014

ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள்
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள்
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள்
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள் (உள்தோற்றம்)
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள்
ஸ்ரீ குமரகோட்ட ஆலய புகைப்படங்கள் (உள்தோற்றம்)

சிந்தனைகள்



வியாழன், 3 ஜூலை, 2014

பெருமானே உடலைத் தருகின்றான்

74.
ஒரு மூச்சு என்று செறிவு நெறியில் குறிக்கப்படுகின்ற, இயல்பாய் மூச்சு வாங்கி விடுகின்ற அளவிலே, தந்தையின் மூச்சில், சற்று குறைவு ஏற்படுமாயின் குழவி குறளாய் அல்லது வளராது குட்டையாய்ப் பிறக்கும் என்கின்றார் திருமூலர். தந்தையின் மூச்சுக் காற்று பெரிதும் குறையுமாயின் குழவியின் கை கால்கள் முடமாகப் பிறக்கும் என்றும் குறிப்பிடுகின்றார். இதில் ஆணின் மூச்சே அன்றி பெண்ணின் மூச்சு அளவு குழவியின் உடலைத் தாக்குதல் இல்லை என்பதுவும் தெளிவு. இதனைப், “பாய்கின்ற வாயுக் குறையில் குறளாகும், பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும், பாய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும், பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லைப் பார்க்கிலே” என்கின்றார் திருமூலர்.
துணையர் கலவிக் காலத்தில் தாயின் வயிற்றில் நீங்க வேண்டிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த அறிவு உடையதாய் இருக்கும் என்கின்றார். தாயின் வயிற்றில் நீங்க வேண்டிய சிறுநீர் நீங்காது தங்கியிருக்குமாயின் குழவி ஊமையாகும் என்கின்றார். நீங்க வேண்டிய மலமும் சிறுநீரும் இரண்டுமே நீங்காமல் வயிற்றில் தங்கியிருக்குமாயின் குழவி குருடாகப் பிறக்கும் என்பதனை, “மாதா உதரம் மலம்மிகில் மந்தனாம், மாதா உதரம் சலம்மிகில் மூங்கையாம், மாத உதரம் இரண்டுஒக்கில் கண்ணில்லை, மாத உதரத்தில் வந்த குழவிக்கே” என்று குறிப்பிடுகின்றார். குழந்தையின் வினைக்கீடாகப் பெருமான் தாயின் வயிற்றிலும் தந்தையின் மூச்சிலும் பல்வேறு நிலைகளை ஏற்படுத்திக் குழவியின் அகப்புற உறுப்புக்களின் நலனை அமைக்கின்றான் என்பதனையும் திருமூலர் தெளிவிக்கின்றார்.
கலவியில் கூடும் கணவனின் மூச்சுக் காற்றின் இயல்போடு கணவனுக்கு மூச்சுக் காற்று வல மூக்கின் வழி இயங்கிக் கொண்டிருக்குமாயின், குழவி ஆணாய் அமைவதற்குப் பெருந்துணையாய் அமையும் என்றும் இடது மூக்கின் வழியாய் இயங்கிக் கொண்டிருப்பின் குழவி பெண்ணாய் அமையும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். மூச்சு இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்குமாயின் குழவி அலியாய் அமைவதற்குப் பெருந்துணையாய் முடியும் என்கின்றார். கருத்தங்கும் காலத்தில் தாயின் வயிற்றில் வெளியாக வேண்டிய மலக் காற்று போக்கப் படாமல் தடுக்கப் பட்டு மேல் எழுந்து பாயுமாயின் இரண்டு கரு தங்கும் என்பதனைக், “குழவியும் ஆணாம் வலத்து அதுவாகில், குழவியும் பெண்ணாம் இடத்து அதுவாகில், குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில், குழவி அலியாகும் கொண்டக் கால் ஒக்கிலே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். எது எப்படி இருப்பினும் இவை தந்தை, தாய், குழவி ஆகியோரின் வினைக்கு ஈடாகவே பெருமானால் அமைக்கப் பெறுகின்றன என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தாய் தந்தையரின் கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று வலம், இடம் என்னும்  வாங்கி விடும் வகையில் இருவருக்கும் வலமாகவோ அல்லது இடமாகவோ ஒரே அளவையுடன் இருக்குமானால் தங்கிய கருச் சிதைவு உறாது முன்பு குறிப்பிட்டது போல் குழவி ஆணும் பெண்ணுமாய் நிலை பெறுதலோடு அல்லாமல் அழகாயும் இருக்கும் என்கின்றார் திருமூலர். குழவி ஆண் பெண் ஆவதற்குத் தந்தையின் மூச்சுக் காற்று துணை நிற்கின்றது என்றாலும் தாயின் முச்சுக் காற்று தந்தையின் மூச்சுக் காற்றை ஒற்றிருத்தல் குழவியின் அழகிற்குக் காரணமாக அமையும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இன்றி தாய் தந்தையருக்கு மூச்சு மாறி மாறி இயங்குமானால் தயின் வயிற்றில் தங்கிய கரு பின் நிலை பெறாமல் அழிந்துப் போகும் என்கின்றார். இதனைக், “கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில், கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும், கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே” என்று குறிப்பிடுகின்றார்.
 தாய் தனது கருப்பையில் குழவியினை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தந்தையின் நடு நாடியில் தீயின் கூறாக விளங்கிப் பின் முதிர்ந்து தாயின் கருப்பையில் வந்து வெண் துளியாய் விழுகின்றது. எனவே குழவியை முதலில் கருக்கொள்வது தந்தையே என்று தெளிவாகின்றது. இது பற்றியே குழவிகளின் பிறப்புப் பத்திரங்களில் குழந்தையின் பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயரைக் குறிப்பிடுகின்றார்கள் போலும். தந்தையின் நடு நாடியில் தீயின் கூறாக விளங்கி முதிர்ந்து தாயின் கருப்பையின் உள்ளே வந்து விழுந்த குழவி, ஞாயிற்றின் நிறம் போல செந்நிறத்தை உடையதாய் முற்றி, அதன் பின்னர் ஆண், பெண், அலி எனும் வகைபடத் தோன்றுகின்ற உருப்புக்களை உடையது ஆகும் என்கின்றார். இதனைக், “கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும், தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம், பால் வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப், போல் வளர்ந்துள்ளே பொருந்து உருவாமே” என்று குறிப்பிடுகின்றார்.
தந்தையின் உடற்கூற்றில் வளரும் உயிர் ஆற்றல், தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளினுள் புகுந்து கெடாது நிற்றலே கருத் தங்குதல் ஆகும் எனப்படுகின்றது. குழவி ஒன்றாதலும் பலவாதலும் தந்தையின் உயிராற்றல் புகப் பெறும் பூப்புப் பொருள்களின் எண்ணிக்கையே காரணம் என்பர். தங்கிய கருவின் உருவம் பத்துத் திங்கள் கால அளவையின் போது வளரும். பத்தாவது திங்களே குழவி பிறக்கும் பருவமாகத் தாயின் வயிற்றிலிருந்து வெளி உலகிற்கு வரும். வெளி உலகிற்கு வந்த குழவி தாய் தந்தையரின் அரவணைப்பில் வளரும். அவ்வளர்ச்சி ஒவ்வொரு கணமும் நிகழும் என்றாலும் அதனை ஒருவரும் துள்ளியமாகக் காண வல்லவர் அல்லர். குழவியின் வளர்ச்சியினைக் கண்டு வியப்பு அடைவது மட்டுமே இயலும். மாறாகக் குழவியின் வளர்ச்சி நம் கண்களுக்குப் புலனாகாது தொடர்ந்து நடைபெறும் என்கின்றார் திருமூலர். குழந்தை கருவாதலும் கருப்பையினுள் வளர்ந்து குழவியாகிப் பிறக்குமாறும் பிறந்து வளருதலும் பெருமானின் அருட் துணையால் மாயையின் துணைக் கொண்டு நடைபெறுகின்றது என்கின்றார் திருமூலர்.
தாயின் வயிற்றில் கருவை இட்டவனாகிய தந்தையும் அக்கரு தங்குதலையும் தங்காது அழிவதனையும் அறியமாட்டான். தந்தை இட்டக் கருவினை ஏற்றத் தாயும் ஏற்றக் கரு தங்கியதா அல்லது அழிந்து பட்டதா என்று அறிய மாட்டாள். தந்தையிடம் இருந்து வந்த கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணிகலன் ஆக்குகின்ற பொற்கொல்லன் ஆகிய இறைவன் இதனை அறிவானே ஆயினும் அவனும் தாய் தந்தையருக்குக் கரு தங்கியதைச் சொல்லான். இறைவன் தாய் தந்தையரின் உயிரில் கலந்து இருப்பினும் அவன் செய்கின்ற இவ்வருட்செயல்களை உயிர்கள் அறியாமல் வாழ்கின்றன. தவிர மாயையின் வஞ்சனையை உயிர்கள் அறியாதனவாக உள்ளன என்பதனை, “இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள், தட்டான் அறிந்தும் ஒருவருக்கு உரைத்திலன், பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன், கெட்டேன் இம்மாயையின் கீழ்மை எவ்வாறே!” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆண் பெண் ஆகிய இருவரும் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப்பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின் தாய் தந்தையர் மட்டுமல்லாது குழந்தையும் தனது பிறப்பின் நோக்கத்தை அறியாமல் நிற்கின்றது என்பதனை, “இன்புற நாடி இருவரும் சந்தித்துத் துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின், முன்புற நாடி நிலத்தின் முந்தோன்றிய, தொண்புற நாடி நின்று ஓதலுமாமே” என்கின்றார் திருமூலர்.
குயில் தன் முட்டையைக் காக்கையினது கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டை என்றே அதனைக் கருதி அடை காத்தல் போல, இறைவன் தனது குழந்தைகளான உயிர்களை உடல் பெற்றுச் செயல்படுதல் பொருட்டுத் தாயின் கருவிலே இட தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாது உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அக்கருவினை அழித்து விட நினையாமலும், “ஏன் வந்தது” என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் மயக்கத்தினாலேயாம் என்கின்றார் திருமூலர். இதனால் கருவாய்த் தோன்றும் குழவி பெருமானின் மகவு என்பதும் அம்மகவினைப் பெருமான் தந்தை தாயர் வழி வைத்து வளர்த்து எடுக்கின்றான் என்பதுவும் தெளிவாகின்றது. இதனையே, “பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய் வளை” என்று பெருமானை மணிவாசகர் குறிப்பிடுவார். உலகம் ஒடுங்கும் காலத்து உடம்பும் பல நிலைகளில் ஒடுங்கி, முடிவில் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடலை மீளவும் முன்பு போலத் தோற்றுதல் வேண்டும் எனச் சிவ பெருமான் திருவுளம் கொள்ளின், அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்பு போலத் தோன்றும் என்கின்றார் திருமூலர். இதனால் உயிர்களுக்கு உடம்பு இறைவனாலேயே தோற்றுவிக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதுவும் ஆகின்றது என்று தெளிவுறுத்துகின்றார். பெருமான் செய்யும் பேர் உதவியினையும் அதற்குத் துணையாய் உள்ள பெற்றோரையும் போற்றி வாழ்வாங்கு வாழ்வோமாக!.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

. சைவத்தில் கடவுள் பலவா?
அன்னைத் தமிழில் அரிய மூவாயிரம் மந்திரங்களைத் தன்னகத்தே கொண்டுத் திருமந்திரம் என மிளிர்கின்ற திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். மிகச்சிறந்த சிவயோகியாகவும் சிவ ஆகம ஆசானாகவும் விளங்கும்  திருமூலர் அருளிய திருமந்திரம் பன்னிரு திருமுறை வரிசையில் பத்தாம் திருமுறையாக இடம் பெற்றுள்ளது. திருமந்திரத்தின் முதல் செய்தியாகக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சென்ற கட்டுரையில் கண்டோம். அப்படியாயின் சைவத்தில் ஏன் பல கடவுளர் எனும் கேள்வியினுக்குத் திருமூலர் கூறும் பதிலினை இனி காண்போம்.
பொது நிலைக்கு வராத தனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான். இந்நிலையில் அவனைச் சிவம் என்று குறிப்பிடுவோம். பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பவன் தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதுபோதுதான் “சிவமாக” இருந்த கடவுள், “சிவன்” ஆகின்றான் என்கின்றார். திருமந்திரத்தின் முதல் பாடலான, “ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்……”, எனும் பாடலிலேயே இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில் தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் “சிவை” என்கிறது.
பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும் பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம் முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், “எத்திறம் நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்” என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின் திருவருள் தாய்மை இயல்பும் இறைவனை விட்டு  வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப் பிரியாத இயல்பும் உடையது என்று உணர்த்தச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய் வைத்து வழிபட்டு மகிழ்ந்தனர்.
இக்காரணம் பற்றியே இறைவன் ஆண் ஒரு பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான். இதனையே, ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்” என்று தமிழ்ஞானசம்பந்தர் அருளினார். இதனால் இறைவனின் இடப்பக்கம் உள்ள பெண் வடிவம் நான் காணுகின்ற சாதாரணப் பெண்ணின் வடிவம் அல்ல! உமை அம்மையை இறைவனின் மனைவியைப்   போன்று உருவகப்படுத்தியே சொல்கின்றனர். இறைவனின் திருவருள் இறைவனுக்கு எல்லாமாக இருக்கின்றது  என்பதனைத்தான் திருமூலர், “அரனுக்கு மனோன்மணி தாயும், அரனுக்கு மனோன்மணி மகளும், அரனுக்கு மனோன்மணி     நல்தாரமுமாமே” என்று குறிப்பிடுவார். இறைவி இறைவனுக்குத் தாயாகவும் மகளாகவும் மனைவியாகவும் குறிக்கப்படுவது அவன் திருவருள் இயல்பினை உருவகமாகக் குறிப்பது பற்றியே அன்றி, அது அதுவாக அல்ல என்கிறார்.
எனவே சைவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சிவஆகமங்களிலே சொல்லப்பட்டுள்ள, திருமுறைகளிலே இயம்பப்பட்டுள்ள, பல்வேறு பெண் கடவுளர் வடிவங்கள் அனைத்தும் ஒன்றாய் இருக்கின்ற பரம்பொருளின் திருவருளையே குறிக்கும். அது இறைவனைத் தவிர வேறு அல்ல! தெளிவின்மையின் காரணமாகவே நம் கடவுள் இல்லறம் நடத்துதல்  போன்ற ஒரு மயக்க சிந்தனையில் உழல்கின்றோம். இறைவனின் அருள் இயல்பினையொட்டியே இறைவன் ஆற்றுகின்ற தொழில்களுக்கேற்ப இறைவனின் சத்திகளுக்கும் இறைவனுக்கும் பல்வேறு பெயர்களையும் வடிவங்களையும் வழங்கியுள்ளனர் நம் முன்னோர். வீர இயல்பினை மலைமகள் என்றும் செல்வம் நல்கும் இயல்பினை அலைமகள் என்றும் கல்வி நல்கும் இயல்பினைக் கலைமகள் என்றும் குறிப்பிட்டனர்.

அதற்கேற்பப் பெருமானின் பெயரையும் முறையே துடைப்போன், காப்போன், படைப்போன் என்றும் அமைத்தனர் (உருத்திரன், திருமால், பிரமன்). இவ்வடிவங்கள் இறைவனின் திருவருள் இயல்பு பற்றி அமைந்தவையே அன்றி கணவன் மனைவியர் என்று பொருள்படாது.
இவ்வடிப்படையிலேதான் பிற வடிவங்களும் வருகின்றன. முருகன், பிள்ளையார் போன்ற திருவடிவங்கள் வேறு கடவுளர் அல்ல! அல்லது இறைவனின் பிள்ளைகளும் அல்ல! இறைவன், இறைவி, முருகன், பிள்ளையார் போன்றோர் ஒரு குடும்பத்தினர் அல்லர்! ஒன்றாய் இருந்த பெருமானின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து அறிவு வடிவாய்த் தோன்றியதே அறிவு வடிவாகிய முருகன் வடிவம். ஒன்றாய் இருந்த இறைவரின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து ஓசை வடிவாக வெளிப்பட்டதே ஓம்கார வடிவாகிய பிள்ளையார். இவ்விரு வடிவங்களின் இயல்பு பற்றித் தோன்றிய பல்வேறு வடிவங்களும் பரம்பொருளான அந்த ஒரு இறைவனின் வேறு வடிவங்களே! எனவேதான், “எத்தெய்வம் கண்டீர் ஆங்கு அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவர்” என்று மெய்கண்ட நூல்கள் புகல்கின்றன.
எனவே, சீர்மிகு செந்தமிழர் இறைநெறியாகிய திருமந்திரத் திருநெறி சைவத்தில் கடவுள் ஒருவரே! பல்வேறாகத் தோன்றுவது அவ்வொறு பரம்பொருளின் அருள் வடிவங்களே என்று பறைசாற்றுகின்றது.
Print Friendly
Share !

ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய 'திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா'



பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் .. தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் .. ஆதிநடு ...... 1

அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் .. வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் .. அறிவுக்கு ...... 2

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் .. தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் .. எஞ்சாத ...... 3

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் .. தாரணியில்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் .. முந்தும் ...... 4

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் .. திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால் இலய
போகஅதி காரப் பொருளாகி .. ஏகத்து ...... 5

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் .. இருள்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் .. தேகமுறத் ...... 6

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து .. மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து .. மாறிவரும் ...... 7

ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் .. தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்
சென்மித்து உழலத் திரோதித்து .. வெந்நிரய ...... 8

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் .. தர்க்கமிடும்
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து .. முன்னூல் ...... 9

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாயோகம் சார்வித்து .. அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து .. நால்வகையாம் ...... 10

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் .. பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி .. உலவாது ...... 11

அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் .. பிரியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு .. திருநோக்கால் ...... 12

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் .. பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் .. பூணும் ...... 13

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி .. முடியாது
தேக்குபர மானந்தம் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் .. போக்கும் ...... 14

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்துலவா இன்பம் .. மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் .. மின்னிடத்துப் ...... 15

பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி .. மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் .. பெருகியெழு ...... 16

மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் .. தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்தம் முடியாக .. ஞானம் ...... 17

திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா .. இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே .. மின்னுருவம் ...... 18

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் .. தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் .. விண்ட ...... 19

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் .. பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் .. நிலவுமிழும் ...... 20

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் .. வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் .. எவ்வுயிர்க்கும் ...... 21

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் .. சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் .. விடுத்தகலாப் ...... 22

பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் .. நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் .. தாகமுடன் ...... 23

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் .. கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் .. ஆரமுதம் ...... 24

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும் .. ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் .. மார்பகத்தில் ...... 25

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் .. மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் .. தெறுபோர்...... 26

அதிர்கே டகம் சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் .. முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட் டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் .. பைம்பொன் ...... 27

புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் .. திருவரையும்
நாதக்கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் .. சோதி ...... 28

இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் .. உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே .. ஓதியஐந்து ...... 29

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே .. தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் .. பந்தனையால் ...... 30

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா .. வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் .. பலகோடி ...... 31

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் .. தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே .. மேவ ...... 32

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே .. பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் .. சுகலளிதப் ...... 33

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் .. பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் .. தொல்லுலகில் ...... 34

ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்து ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் .. ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் .. வாய்ந்தசிவ ...... 35

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் .. காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் .. சந்ததமும் ...... 36

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைத்தருளும் ஆணையும் .. தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே .. தேசுதிகழ் ...... 37

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி .. ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் .. தந்து ...... 38

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப .. விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் .. அங்கண் ...... 39

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் .. அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் .. போதொருசற்று ...... 40

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் .. முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் .. குறுமுறுவல் ...... 41

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் .. தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் .. செய்ய ...... 42

முகத்தில் அணைத்துச் சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் .. சகத்தளந்த
வெள்ளை விடை மேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே .. கிள்ளைமொழி ...... 43

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து .. தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு .. நெருப்பிலுதித்து ...... 44

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கடா அதனைச் சென்று கொணர்ந்து .. எங்கோன்
விடுக்குதி என்று உய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்டிக்கும்
நடத்தி விளையாடும் நாதா .. படைப்போன் ...... 45

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தொன்று
உகந்த பிரணவத்தின் உண்மை .. புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்கன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே .. மட்டவிழும் ...... 46

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே .. கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே .. சீரலைவாய்த் ...... 47

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து .. வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் .. சயேந்திரனாம் ...... 48

சூரனைச் சோதித்துவரு கென்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே .. காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் .. பானு ...... 49

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் .. சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் .. போரவுணன் ...... 50

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் .. அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே .. மாறிவரு ...... 51

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மேலோனே .. மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே .. மறைமுடிவாம் ...... 52

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே .. பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் .. பூமருவு ...... 53

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து .. மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே .. உள்ளம் உவந்து ...... 54

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே .. நாறுமலர்க்
கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்தில் பதிபுரக்கும் செவ்வேளே .. சந்ததமும் ...... 55

பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் .. பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமும் தீ நீரும் பொருபடையும் .. தீது அகலா ...... 56

வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் .. அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் .. கச்சைத் ...... 57

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் .. விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற .. வந்திடுக்கண் ...... 58

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து .. பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் .. ஓசை ...... 59

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து .. ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் .. தம்மைவிடுத்து ...... 60

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் .. சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள். ...... 61

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று.

வேல் வணக்கம்


'வரகவி' அ. சுப்ரமணிய பாரதி அருளிய

''

       திருப்பரங்குன்றம்

சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவி
ஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்
மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்
கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.

       திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

முறுவலிற் புரமெரித்த முக்கணன் தனக்கும் கும்பக்
குறுமுனி தனக்கும் போத குருவெனும் அரிய பேறு
பெருமொரு சிறியன் தெய்வப் பிடிமகிழ் கணவன் செந்தூர்
ஆறுமுகன் கர த்துவேலை அடுப்பதே யெமக்கு வேலை.

       திருஆவினங்குடி (பழனி)

மாதவன் மகிழ்ந்(து) அளித்த மடந்தையர் இருபால் மேவ
மேதகு மயிலின் மேல் ஓர் வெற்பினில் உதயமான
ஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும்
நாதன் செவ் வேளின் வேலை நாடுவ(து) எமக்கு வேலை.

திண்ணணார் சுவைத்(து) அளித்த தீஞ்சுவைக் கறி சுவைத்த
அண்ணணார் அணைத்துக் கண்ணே! அப்பனே! நீயே நேய
வண்ணமாம் பழம் என்று ஓத மகிழ்ந்து தென் பழனி வந்த
விண்ணவன் கரத்து வேலை விளம்புவ(து) எமக்கு வேலை.

       திரு ஏரகம் (சுவாமிமலை)

சென்னி ஆறும் தணிந்த சிவபரஞ் சுடர்க்கு, வேதம்
சொன்ன ஆசிரியனென்று தொல்லுலகனைத்தும் போற்றப்
பொன்னிசூழ் ஏரகத்துப் பொறுப்பினிற் கோயில் கொண்ட
பன்னிரு கையன் வேலைப் பணிவதே எமக்கு வேலை.

       குன்றுதோறாடல் (திருத்தணி)

கொன்றைசேர் சடைகள் ஆடக்கொடியிடை உமையாள் காண,
மன்றிலே ஆடல் கொண்ட மகதேவன் வியந்து வாழ்த்தக்,
குன்றுதோறாடல் காட்டும், குமரவேள் மலர்க் கரத்து
வென்றிசேர் சத்தி வேலை வேண்டுவ(து) எமக்கு வேலை.

       பழமுதிர்சோலை

புவனம்ஓர் மூன்றும் வாழப் புராரிதன் நுதர்கண் நோக்கில்
அவிர்சுடர் ஒளியாய்த் தோன்றி, அறுமுகத் தேவாய், அன்பர்
பவபயம் ஒழித்துக் காக்கப் பழமுதிர்சோலை மேவும்
சிவசுப்ர மண்யன் வேலை சேவிப்ப(து) எமக்கு வேலை.

       ... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

சத்ரு சங்கார வேற் பதிகம்




       ... காப்பு ...

சண்முகக் கடவுள் போற்றி
சரவணத் துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தண்மலர் கடப்பமாலை தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றி.

       ... நூல் ...

       ... 1 ...

அப்பமுட னதிரசம் பொறிக்கடலை துவரைவடை
யபமுதுசெய் யிமுகவனும் ஆதிகேசவனிலட்சுமி திங்க
டினகர னயிராவதம் வாழ்கவே, முப்பத்து முக்கோடி
வானவர்களிடர்தீர முழுது பொன்னுலகம் வாழ்க
மூவரொடு கருடகந் தருவர்கிம்பு ருடரும்
முதுமறைக் கிழவர் வாழ்க செப்பரிய விந்திரன்
தேவியி ராணி தன் திருமங்கலம் வாழ்கவே
சித்திவித்யாதரர் கின்னரர்கள் கனமான
தேவதைகள் முழுவதும் வாழ்க சப்தகலைவிந்துக்கு
நாதீயா மதி ரூப சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தியெதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே.

       ... 2 ...

சிந்திசுந்தரி கெளரி யம்பிகை க்ருபா நிதி
சிதம்பரி, சுதந்தரிபரசிற்பரி சுமங்கலி நிதம்
பரிவிடம் பரிசிலா சுதவிலாசவிமலி கொத்துதிரி
சூலிதிரி கோணத்தி ஷட் கோண குமரிகங்காளிருத்ரி
குசலிவோங்காரி ரீங்காரியாங்காரி வீங்காரி
ரீகாரியம்பா, முக்தி காந்தா மணிமுக்குண சுந்தரி
மூவர்க்கு முதல்வி ஞான முதுமறைக் கலைவாணி
யற்புத புராதனி மூவுலகுமான ஜோதி,
சக்தி சங்கிரி நீலி கமலி பார்வதி
தரும் சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 3 ...

மூரியுள முப்பத்து முக்கோடி தேவரும்
முனிவரொடு மசுரர் கூடி முழுமந்த்ர கிரி தன்னை
மத்தாகவே செய்து முதற்கணத் தமுது பெறவே
கோரமுளவாக கியினாயீரம் பகுவாயில்
கொப்பளிதிடு விடங்கள் கோளகையு
மண்டங்களியாவையு மெரித்திடுங்கொடியவர
வினைப்பிடித்து வீரமுடன் வாயினாற்
குத்தியுதிரம் பரவ விருதாளிலே மிதித்து
விரிந்துகொழுஞ் சிறகு அடித்தே யெடுத்துதரும்
விதமான தோகை மயில் சாரியாய்த் தினமேறி
விளையாடி வருமுருக சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 4 ...

உக்ரமுள தாருகன் சிங்காமசூரனு முன்னுதற்குரிய
சூரன் உத்திகொளு மக்நி முகன்ட் பானுகோபன்
முதல் உத்தண்ட வசுரர்முடிகள், நெக்குவிடகரி
புரவி தேர்கள் வெள்ளங்கோடி நெடியபாசங்கள்
கோடி நிறையிலா வஸ்திரம் வெகுகோடிகள், குருதி
நீரிற் சுழன்றுலவவே, தொக்கு தொகு திதிதிதிமி
டுண் டுடுடு டகுகு டிகு துந்துமி தகுகு திதிதை தோத்தி
மிடங்கு குகுடிங் குகுகு சங்குகென தொந்தக்
கவந்தமாட, சக்ரமொடு சத்திவிடுதணிகை
சென்னியில்வாழுஞ் சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 5 ...

அந்தியிற்பேயுச் சிறுமுனி காட்டேரி
அடங்காத பகலிரிசியும் அகோர கண்டங்கோர
கண்ட சூனியம்பில்லி அஷ்ட மோகினி பூதமும்,
சந்தியான வசுகுட்டி சாத்திவேதாளமுஞ் சாக்னி
யிடாகினிகளும் சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி
முதல் சஞ்சரித்திடுமுனிகளும், கிந்தை நொந்தலறி
திருவெண்ணீறு காணவே தீயிலிடு மெழுகு போல,
தேகமெல்லாங் கருகி நீறாகவே நின்று சென்னிருதணிகை
மலையில், சந்ததங்கலியாண சாயுட்ச
பதமருளுஞ் சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 6 ...

கண்டவிட பித்தமும் வெடிப்பு தலைவலி
யிருமல் காமாலை சூலைகுஷ்டம், கண்ட மாலைத்
தொடைவாழையாய்ப் பற்றினொடு கடினமாம்
பெருவியாதி அண்டொணாதச் சூரஞ் சீதவாதச்சுரம்
ஆறாத பிளவை குன்மம் அடங்காத விரும்பஃது
மேகமுடனா உலகத்தி லெண்ணாயிரம் பேர் கொண்ட
தொரு நோய்களும் வேலொன்றுரைத்திடக்
கோவென்ன வோலமிட்டுக் குலவுதின கரன்முன்
பஞ்சுபோல் நீங்கிவிடும் குருபரன் நீறணிந்து, சண்டமாருத
காலவுத்தண்ட கெம்பீர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 7 ...

மகமேரு ளதயகிரி யஸ்திகிரியுஞ்
சக்ரவாவுகிரி நிடதவிந்தம், மாருக்ர
தரநரச் சிந்மகிரி யத்திகிரி மலைகளொடு மதனசுமவா
ஜெகலெடுத் திடுபுட்ப தந்தமயிராவதம்
சீர்புண்டரீக்குமுதம் செப்புசா ருப்
பூமி பஞ்சினம் சுப்பிர தீபவா மனமாதிவா
சுகிமகா புதுமனானந்தகார்க் கோடகன் சொற்சங்க
பாலகுனிகன் தூயதக்கண் பதும சேடனோடரவெலாம்
துடித்துப் பதைத்ததிரவே தகதகென நடனமிடு
மயிலேறி விளையாடுஞ் சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 8 ...

திங்கள் பிரமாதியரு மிந்திராதி தேவருத்தினகாரு
முனிவரொடு சிந்திரா புத்திரர்மொளி
யகலாமலிருபாதஞ் சேவித்து நின்று தொழவும்
மங்கைதிரு வாணியுமயிராணி யொடுதத்த
மாதரிரு தாள்பணியவும் மகாதேவர் செவிகூறப்
பிரணவமுரைத்திட மலர்ந்த செவ்வாய்களாறும்
கொங்கை களமம் புணுகு சவ்வாது மணவள்ளி குமரி
தெய்வானையுடனே கோதண்டபாணியும்
நான்முகனுமே புகழ் குலவுதிருத்
தணிகை மலைவாழ், சங்குசக்கர மணியும்
பங்கையக்குமர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 9 ...

மண்டலம் பதினாலு லோகமும் அசைந்திட
வாரிதியே ரெழும்வறள வலிய வசுரர் முடிகள்
பொடிபடக் கிரவஞ்ச மாரியெழத் துரளியாகக்
கொண்டனிற வெனுமக ரண்டங்களெங்குமே கூட்டமிட்டேக
அன்னேர் குடல் கைகாலுடன் மூளை தலைகள்
வெவ்வேறாகக் குத்திப் பிளந்தெடுத்து அண்டர்பணி
கதிர்காமம் பழநிசுப்பிரமணிய மாவினன் குடியே ரகம்,
அருணாசலங்கைகலை தணிகைமலை மீதிலுரை ஆறுமுகப்
பரம குருவாம், சண்டமா ருதகால சம்மார
வதிதீர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 10 ...

மச்சங் குதித்துநவமணி தழுவ வந்தநதி
வையாபுரி பொய்கையும் மதியமுத்தஞ்
செய்யும் சொற்கோபுரத் தொளியும்
வானமேவு கோயிலழகும், உச்சிதம தானதிரு
வாவினன் குடியில்வாழ் உம்பரிட முடிநாயக, உக்ரமயி
லேறிவரு முருக சரவணபவ ஓங்காரசிற் சொரூபவேல்,
அச்சுத க்ருபாகர னானைமுறை செய்யவே ஆழியை
விடுத்தானையை, றன்புட னிரட்சித்த திருமால்
முகந்தனெனு மரிகிருஷ்ண ராமன் மருமகன், சச்சிதானந்த
பரமானந்த சுரகந்த சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... சத்ரு சங்கார வேற் பதிகம் முற்றிற்று ...

முருகன்


முருகனின் ஆயுதங்கள்

"முருகனின் ஆயுதங்கள்" என்பது முருகப் பெருமானின் படைக் கலங்கள் என்று பொருளில் விளங்குவதாகும். சூரன் முதலிய அசுரர்களை வென்று வாகை சூட, கந்தப் பெருமான் கொண்ட பல்வேறு போர்க் கோலங்களில் அவரது கரங்களில் கொண்ட படைக் கலங்களே அயுதங்களாக அமைந்து உள்ளன. அப்பெருமானது கரங்களில் திகழும் அனைத்துமே ஆயுதங்கள் அல்ல. உதாரணமாக ஜபமாலை, கமண்டலம், கரும்பு, வில், மலரம்பு, தாமரை, நீலோத்பலம், பூரணகும்பம், சுருவம் முதலானவற்றை வெவ்வேறு வடிவங்களில் காரணகாரியம் கருதி அவரது கரங்களில் ஏந்தியுள்ளார். பன்னிரு கரமுடைய பெருமான் ஆதலால் மற்ற எந்தக் கடவுளருக்கும் இல்லாத வகையில் அதிகமான எண்ணிக்கையில் ஆயுதங்களை உடையவர் இவரே.

முருகப் பெருமானது பல்வேறு வடிவங்களைப் பற்றி விவரிக்கும் குமாரதந்திரம், ஸ்ரீதத்வநிதி, தியான ரத்னாவளி முதலான சிற்ப நூல்களில் அவரது ஆயுதங்களைப் பற்றிய விவரங்களையும் அறிய முடிகிறது. தணிகைப் புராணத்தில் முருகனது வடிவங்களைப் பற்றியும், அகத்தியர் அருள்பெறு படலத்தில் ஆயுதங்களைப் பற்றியும் விவரம் அறிய முடிகிறது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்களில் முருகனது படைக் கலங்களைப் பற்றிய விவரங்கள் காணக் கிடக்கின்றன.

இனி கந்தப் பெருமானது படைக் கலங்களைப் பற்றி விரிவாக நோக்குவோம்.
kaumaram vel 1. வேலாயுதம்

முருகப் பெருமானிடம் அமைந்துள்ள வேலாயுதமே ஞானசக்தியாகும்.
வெல்லும் தன்மை உடையது, வேல். எல்லாவற்றையும் வெல்வது அறிவாற்றல்.
அறிவானது ஆழமும், அகலமும், கூர்மையும் உடையது.

   "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே"

... என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகர். வேலின் வடிவமும்
இத்தகையதே. முருகனின் ஞானவேலுக்கு 'சக்தி' என்ற பெயரும் உண்டு.

   "சக்திதான் வடிவேதென்னில் தடையிலா ஞானமாகும் என்பது
சிவஞான சித்தியார்வாக்கு".
ஞானமே அஞ்ஞானத்தை வெல்ல வல்லது. ஆதலின் ஆணவம், கன்மம், மாயை எனும் மலங்களாகிய சூரபதுமன்,
சிங்கமுகன், தாருகன் என்னும் அசுரர்களை அழித்தொழித்து "ஞானமயம்" ஆகிய வேலே யாவருக்கும் நலம் புரிந்தது. வேல்
வஞ்சர்க்கு வஞ்சனை செய்யும்; அடியவர்க்கு உதவும்; அது ஐந்தொழில் செய்யும் என்பதையெல்லாம் திருப்புகழில் காட்டுகிறார்
அருணகிரியார். வேலாயுதத்தை "உடம்பிடித் தெய்வம்" என்று கந்தபுராணம் போற்றும். சக்தி வேலானது ஊறு கூரிய
பகுதிகளையுடையதாகவும், தகட்டு வடிவிலும் அமைந்ததாகும் என்பர். இதனை நடுவில் பிடித்து ஏறிவது வழக்கம்.
sevalkodi 2. கோழிக் கொடி

முருகனுக்குக் கொடியாக விளங்குவது கோழி. கோழிக்கு சேவல் (குக்குடம்)
என்றும் பெயர். சேவலாகிய கோழி ஒளியை விரும்புவது. எனவே அது அறியாமை
என்னும் இருளைப் போக்கி மெய்யறிவாகிய ஒளியைப் பரப்பும் முருகனின் கொடியாக
விளங்குவது பொருத்தமாகும்.

வைகறையில் கோழி கூவுதல் ஓங்கார மந்திரத்தை ஒளிவடிவில் உலகுக்கு
உணர்த்துவது ஆகும். எனவே, கோழியை நாத தத்துவம் என்பர். நாதம் இல்லையேல்
நாநிலமே இல்லை. சேவல் நம் உயிர்க்குக் காவல். சிவஞான வடிவாகவே சேவல்
விளங்குகின்றது.

முருகன் கோழிக் கொடியேந்தி நம்மை எல்லாம் சிவஞானப் பேரொளியில் துய்க்கச்
செய்து அருளுகின்றார்.

திருச்செங்கோட்டில் முருகப் பெருமான் இடது கரத்தில் சேவலைப் பிடித்துள்ள அரிய
அழகுக் கோலம் அருணகிரியார் மனத்தில் என்றும் நீங்காமல் அக்காட்சி வேண்டியே,

   "சென்றே இடங்கள் கந்தா எனும் போது செஞ்சேவல் கொண்டு வரவேணும்"

... என்று செங்கோட்டு வேலவனை வேண்டுவார்.

( பாடல் 585, 'அன்பாக வந்து' - திருச்செங்கோடு )
   "குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே! குக்குடக் கொடி தரித்த பெருமாளே" ... என்பார் மற்றொரு திருப்புகழில்

( பாடல் 1295, 'நித்தம் உற்றுனை' - பொதுப்பாடல்கள் ). கோழி அக்னி தேவனின் அம்சமாகும்.
angusam 3. அங்குசம்

இது யானையை அடக்கப் பயன்படுவது. இரும்பாற் செய்யப்பெற்ற வளைந்த
மூக்கும், குத்தி அடக்கக் கூடிய ஒரு கூரிய நேரான பகுதியையும் உடையது. நீளமாக
கழிகளில் செருகி இருப்பார்கள். திருமுருகாற்றுப்படையில் முருகப்பிரானது கரங்களில்
ஒன்றில் "அங்குசம் கடாவ ஒருகை" என்று நக்கீரர் குறிப்பிடுவார்.
pasam 4. பாசம்

பாசம் என்பது பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும்.
ஒரு கயிறு அல்லது இரண்டு மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில்
அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்.
vil 5. வில்

வள்ளிநாயகியை அடைய முருகன் எடுத்த வேடன் கோலத்தில் வில்லும் அம்பும்
உண்டு. மூங்கில், சிலை என்னும் மரம் முதலான வளையக்கூடிய நார் மரத்தால்
செய்யப்பெறுவது வில். இந்த வில்லானது இரு தலையிலும் தோல் அல்லது
நார்க்கயிற்றால் கட்டப்பட்ட நாண் இருக்கும். வில்லை வளைத்து நாணை இறுகக்கட்டி
அதன் நடுவில் அம்பை வைத்து விடுவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு வில்லின்
வளையும் நாணின் உறுதியும் இழுத்துவிடுபவன் பலமும் இருக்கின்றதோ,
அவ்வளவுக்கவ்வளவு அம்பின் வேகமும், அது தைக்கும் வன்மையும் அதிகரிக்கும்.
நுனியில் விஷம் தொய்த்து வைப்பதும் உண்டு. அம்பு நுனி பிறைமதி போன்ற
அமைப்பிலும் இருக்கும். இதற்குப் பிறையம்பு என்று பெயர்.
ambu 6. அம்பு

வில்லை வளைத்து எய்யப் பயன்படக் கூடியது அம்பு. நுனி கூரிய முள் போன்றது.
நுனியை ஒரு கழியில் செருகியிருப்பார்கள். நுனி இரும்பால் ஆகியது. அதன் வால்
பாகத்தில் கழுகின் இறகுகளையும் மற்ற பறவை இறகுகளையும் கட்டியிருப்பார்கள்.
பெரும்பாலும் கழுகு இறகே இதற்குப் பயன்படும். இறகு கட்டுவதால் காற்றை
ஊடுருவி விரைந்து செல்லும்.
kaththi 7. கத்தி

பகைவரை அடிக்கவும் குத்தவும் பயன்படும் இந்த ஆயுதம் கைப்பிடியுடன்
இருக்கும்.
kedayam 8. கேடயம்

கத்தியின் வெட்டையும், குத்தையும் தடுப்பதற்காகப் பயன்படுத்துவது
பலகையாலும், வலுவுள்ள காட்டெருமை, கடமா நீர்யானை, காண்டா மிருகம்
இவற்றின் தோலாலும் தயாரிப்பார்கள். பல வடிவங்களில் சதுரம், நீளச் சதுரம்,
வட்டம், முக்கோணம் என்ற அமைப்புகளில் காணப்படுவது.
vAL 9. வாள்

இதற்கு கட்டுவாங்கம் என்றும் பெயர். இது நீளமான கத்தியாகும். போரில்
பகைவர்களை வெட்டப் பயன்படுவது. இதில் ஒரு முனையுடையதும் இரு
முனையுடையதும் உண்டு. குத்துக் கத்தியாகக் கூரிய நுனியை உடையதாக
இருக்கும். பழங்கால மன்னர்கள் இடுப்பில் செருகியிருப்பதை வழக்கமாகக்
கொண்டிருப்பர்கள்.
kodari 10. கோடாரி

மரம் பிளக்கப் பயன்படும் கருவி போலப் பகைவரின் உடலைப் பிளக்க இது
பயன்படும். இது இரும்பால் ஆகியது. வாய் கூர்மையாகவும் பின்புறம் கனமாகவும்
இருக்கும். காம்பில் செருகப்பெற்று இருக்கும். 'பரசு' என்பதும் இதைப்போன்றே
இருக்கும். ஆனால், வாய் சற்று வளைந்து கூரியதாக இருக்கும். இதுவும் காம்பில்
செருகப்பெற்றிருக்கும். காங்கேய சுப்பிரமண்யர் என்ற வடிவில் 'பரசு' ஆயுதம்
உள்ளதாகக் காட்டப்படுகிறது.
sUlam 11. சூலம்

சிவபிரானுக்குரிய சிறப்பான படைக் கலம் சூலமாகும். இது மூன்று நுனிகளை
உடையது. சுரை வரையிலும் எஃகு இரும்பால் செய்யப்பெற்று நீளமான மரக்கம்பில்
செருகியிருப்பார்கள்.
gathai 12. கதை

'திகிரி' என்ற பெயரை உடைய 'கதை' என்றவுடன் பஞ்சபாண்டவர்களில் பீமனது
ஞாபகம் வரும். அல்லது ஆஞ்சநேயரின் கரத்திலுள்ள கதையும் பிரபலமான ஒன்று.
இதற்கு 'குண்டாந்தடி' என்ற பெயரும் உண்டு. பகைவர்களை அடித்து நொறுக்கப்
பயன்படுத்துவது. கையை விட்டு அகலாதபடி காவலாக இருந்து உடையவரை
பாதுகாக்கும் அருமையான ஆயுதம்.
sangu 13. சங்கம்

(சங்கு) திருமாலுக்கு உரிய விசேஷ ஆயுதம். வெற்றியை அறிவிக்கும். பகைவர்களை இதன் ஒலியை கேட்டதுமே அடங்கி ஒடுங்கச் செய்யும். இதில்
பல வடிவங்கள் உள்ளன. திருமாலின் சங்கம் 'பாஞ்ச சன்னியம்' என்று கூறப்படும்.
sakkaram 14. சக்கரம்

இதுவும் விஷ்ணுவுக்குரிய விசேஷ ஆயுதம் ஆகும். இதன் அமைப்பு ஒன்று தேர்
உருளை போன்றும் மற்றது வளையம் போன்றும் அமைந்திருக்கும். கும்பகோணம்
அருகில் உள்ள அரிசிற்கரை புத்தூர் (அழகாபரத்தூர்) எனும் தேவாரம் பெற்ற
திருத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
vajram 15. வஜ்ரம்

முருகப் பெருமானுக்குரிய முக்கியப் படைக்கலமான இது ஆயிரம் நுனிகளை
உடையது. உறுதியான பொருள் எதுவாயினும் அதனை உடைக்கும் வல்லமை
உடையது.
dhandam 16. தண்டம்

நீளமான கைத்தடி, மரத்தாலானது. 'கந்து' என்ற சொல்லுக்கு 'தண்டாயுதம்
கொண்டவன்' என்ற பொருளுண்டு. கந்தசுவாமி வடிவத்தில் பழநியில் தண்டம்
ஏந்திக் காட்சியளிக்கிறார். சுவாமிமலை சுவாமிநாதப் பெருமானும் கந்தசுவாமி
வடிவமே.
uLi 17. உளி (டங்கம்)

மரத்தைச் செதுக்கப்பயன்படும் கருவி. முருகப்பெருமான் எக்காலத்திலும் மக்காத
சூரன் என்னும் மரத்தைச் செதுக்கி மயிலும், சேவலுமாக மாற்றினான் அல்லவா?
குமார தந்திரத்தில் குறிப்பிடப் பெறும் 'சரவணபவன்' என்ற வடிவத்தில் பன்னிரு
கரங்களில் ஒன்றில் "உளி"யை வைத்துள்ளார்.
thomaram 18. தோமரம் (உலக்கை)

இந்த ஆயுதம் பகைவர்களைச் சாடப் பயன்படுவது. குமார தந்திரத்தில்
குறிப்பிடப்பெறும் 'தாரகாரி' என்று வடிவத்தில் உலக்கையை ஒரு கரத்தில்
பிடித்துள்ளார். (சூரபன்மனின் இளைய தம்பி தாரகாசுரனை வதைத்தவன்
ஆதலால் முருகப் பெருமானுக்கு 'தாரகாரி' என்று பெயர்).
karumbuvil 19. கரும்புவில்

இது கரும்பால் செய்யப் பெற்ற வில். இது சிறப்பாக மன்மதனுக்குரியது. பராசக்தி
கையில் தரித்து உள்ள கரும்பானது குறிப்பிடத்தக்கது. யோகியாக இருக்கும் மற்றைய
தெய்வங்களும் போகத்தை உண்டாக்க கரும்புவில் ஏந்தியிருப்பர். ஸ்ரீதத்வநிதியில்
குறிப்பிடப் பெறும் 'சௌரபேய சுப்ரமண்ய'ரின் கரங்கள் ஒன்றில் கரும்புவில்லும்
மற்றொன்றில் மலரம்பும் கொண்டதாகவும் காட்டுவர்.
malarambu 20. மலரம்பு (வல்லி)

இதற்கு புஷ்ப பாணம் என்றும் பெயர், தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் -
என்று ஐந்து பூக்களால் ஆகிய பாணம். (இவற்றை மன்மதன் மக்களிடத்தில்
காம நினைப்பூட்ட எய்வான்).
mani 21. மணி

பரநாதத்தை எழுப்பி ஆணவ இருள் அகன்று ஆன்மாக்கள் உய்ய இறைவன்
திருக்கரத்தில் வைத்துள்ளார். இதுவும் ஒரு ஞானப்படை.

     "பாடின் படுமணி" இரட்ட ஒரு கை"

... என்கிறார் நக்கீரர். திருமுருகாற்றுப்படையில் சரவணபவன் திருவுருவத்தில்
பன்னிரு கரங்களில் ஒன்றில் "மணி" யை ஏந்தியுள்ளார்.
jebamalai 22. ஜபமாலை

இது ருத்ராக்ஷை மாலை. சிருஷ்டித் தொழிலுக்குரிய பிரமனுடையது. முருகப்
பெருமான் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரமனைச் சிறையிட்டு
அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கியபோது பிரமனுக்கு உரிய
ஜபமாலையையும் கமண்டலத்தையும் கொண்டார். கந்தனுக்குரிய கவின்மிகு
கோலங்களில் 'பிரம்மசாஸ்தா' (பிரமனைத் தண்டித்தவர்) என்ற கோலத்தில்
இருகரங்களில் ஜபமாலையையும், கமண்டலத்தையும் ஏந்தி இருப்பார்.
kamandalam 23. கமண்டலம்

இதற்கு 'கிண்டி' என்ற பெயரும் உண்டு. இது தண்ணீர் வைத்துள்ள கலம். இது
ஒரு மரத்தின் காயால் ஆகியது. அந்தணர்கள் தங்கள் நாட்கடன்களைக் கழிப்பதற்காக
இதனை எப்போதும் வைத்து இருப்பார்கள். பிரமனுக்கு உரியது. இதுவும்
அட்சமாலையும் அயுதங்கள் அல்ல. இதனைக் கொண்டு இன்னாருடைய திருவுருவம்
என்றும் அறிய முடியும். தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான
திருக்கோயில்களில் முருகப் பெருமான் 'பிரம்மசாஸ்தா' திருக்கோலத்திலேயே காட்சி
அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
thamarai 24. தாமரை

அழகும், இளமையும் கொண்ட வடிவிலே பால சுவாமியாகக் காட்சி அளிக்கும்
முருகப்பிரான் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி இருப்பார். மலர்களில் சிறந்ததும்,
உயர்ந்ததும் தாமரை மலராகும். இச்சா சக்தியாகிய வள்ளி எம்பெருமாட்டி கையில்
தாமரை மலர் ஏந்தியிருப்பாள். திருச்செந்தூர் சுப்ரமணியர் வலது கையில் தாமரை
மலர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
suruvam 25. சுருவம்

இது யாகத்தீயில் நெய்யிடுவதற்குப் பயன்படுவது.

     "ஒரு முகம் அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே"

... என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவதற்கு ஏற்ப 'அக்னிஞாத
சுப்ரமணியர்' என்ற கோலத்தில் தெய்வீக யாகாக்னியை வளர்ப்பதற்கு ஒரு கரத்தில்
சுருவமும், மற்றொரு கரம் ஒன்றில் நெய் (ஆஜ்ய) பாத்திரமும் கொண்டுள்ளார்.
இவ்வடிவம் இரண்டு முகங்களும், எட்டு கரங்களும் கொண்டுள்ள ஒர் அபூர்வமான
அமைப்பாகும்.
'காங்கேய சுப்ரமணியர்' என்ற வடிவில் ஒரு கரத்தில் பூரண கும்பம் ஏந்திய அமைப்பிலுள்ளார். வேதாரண்யம் அருகிலுள்ள
கோடிக்கரை என்ற தலத்திலுள்ள 'அமிர்த கரை சுப்ரமணியன்' என்ற கோலத்தில் ஒரு கரத்தில் அமிர்த கலசம் ஏந்தி உள்ளது
ஒர் அற்புதமான வடிவமாகும். அப்பெருமானை வழிபட்டு அமுதக் கலசத்தில் உள்ள ஞானத் தேனமுதைப் பெறலாம்.
இதுவரை கந்தப் பெருமானின் பல்வேறு வடிவங்களில் காணப்படும் பல்வேறு விதமான படைக் கலங்கள் (ஆயுதங்களை)
பற்றி அறிந்தோம். இதனைப் பல்வேறு தலங்களில் காட்சியளிக்கும் முருகப் பெருமானது அருட்கோலத்தில் தரிசித்து
இன்புறலாம்.